நியூயார்க்: இந்தியா-அமெரிக்கா உறவில் சமீப காலமாக, நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக ஆயுத பரிவர்த்தனையில் இரு நாடுகளும், தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், இந்தியாவுக்கு நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்திருக்கிறது.
இந்தியாவின் ஆயுத கூட்டாளி என்றால் அது ரஷ்யாதான். இப்போ இல்லை.. இந்தியா சுதந்திரமடைந்த காலத்திலிருந்து ரஷ்ய தயாரிப்பு ஆயுதங்களை இந்தியா வாங்கி வருகிறது. அதற்கேற்றார்போல, ரஷ்யாவும் தரமான சம்பவம் செய்யும் ஆயுதங்களைதான் கொடுக்கும். இதனுடைய லைஃப் டைமும் அதிகம். எனவே போர் விமான இருந்தாலும் சரி, போர் ஆயுதமாக இருந்தாலும் சரி நாம் முதலில் சென்று நிற்கும் இடம் ரஷ்யாதான்.
ஆனால், பாதுகாப்பு விஷயங்களுக்கு ஒரே நாட்டை மட்டும் நம்பியிருப்பது என்பது புத்திசாலித்தனம் அல்ல. எனவே இந்தியா கடந்த சில ஆண்டுகளில் தனது ஆயுத கொள்முதல் தளத்தை விரிவுப்படுத்தியது. இப்படித்தான் பிரான்ஸின் ரபேல் விமானம் வாங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மற்ற ஐரோப்பிய நாடுகளிடமும் தரம் வாய்ந்த ஆயுதங்களை கொள்முதல் செய்ய இந்தியா ஆர்வம் காட்டி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவிடமிருந்து, நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு ஆயுதங்களை வாங்க இந்தியா திட்டமிட்டிருந்தது. ஆனால், அமெரிக்கா தனது ஆயுதங்களை விற்க, அந்நாட்டு நாடாளுமன்றத்திடம் ஒப்புதல் பெற வேண்டும். இந்த ஒப்புதல் தற்போது கிடைத்திருக்கிறது. இதன் மூலம் இந்திய பாதுகாப்பு படையின் பலம் பல மடங்கு அதிகரிக்கக்கூடும்.
AN/SSQ-53G எனப்படும் சோனாபோய் ஆயுதத்தை இந்தியா வாங்க இருக்கிறது. சோனோபோய் என்பது, நீருக்கடியில் உள்ள நீர்மூழ்கி கப்பல் உள்ளிட்டவற்றின் செயல்பாடுகளை துல்லியமாக அறிந்து சொல்லும் ஒரு வகை கருவியாகும். அமெரிக்கா நமக்கு விற்கும் AN/SSQ-53G எனும் கருவியை, ஹெலிகாப்டரிலிருந்து கூட பயன்படுத்த முடியும். இது நீருக்கடியில் 20 ஆயிரம் அடி ஆழத்தில் உள்ள பொருட்களின் செயல்பாடுகளை துல்லியமாக அறிந்து சொல்லும்.
10 கடல் மைல்கள் (18.5 கிலோமீட்டர்) வரை உள்ள பொருட்களை இந்த கருவியால் உணர முடியும். 8 மணி நேரம் வரை இந்த கருவி நீருக்கடியில் வேலை செய்யும். சோனார் அமைப்பின் அடிப்படையில் இது வேலை செய்கிறது. இந்த கருவி ரியல் டைம் டேட்டாவை வழங்குகிறது. எனவே நீர்முழ்கி கப்பலின் செயல்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கையை கடற்படையால் உடனடியாக மேற்கொள்ள முடியும்.
இதில் மேலும் இரண்டு வகைகள் உள்ளன. இரண்டாவது AN/SSQ-62F என குறிப்பிடப்படுகிறது. முந்தையதை போல இதுவும் நீருக்கடியில் 20 ஆயிரம் அடி ஆழத்தில் உள்ள நீர்மூழ்கி கப்பலின் செயல்பாடுகளை துல்லியமாக கண்டறிந்து சொல்லும். ஆனால் முந்தைய கருவியை விட இதன் செயல்பாட்டு வரம்பும், பேட்டரி திறனும், வேலைப்பாடுகளும் அதிகமாகும்.
அதாவது, இது 27.8 கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள நீர் மூழ்கி கப்பலின் செயற்பாடுகளை கண்டறியும். அதேபோல, இதன் பேட்டரி 12 மணி நேரம் வரை தாக்குபிடிக்கும். மிக முக்கியமாக இது அதிவேக நீர்மூழ்கிக் கப்பல்களை கண்டறியவும், அதன் செயல்பாடுகளை போர்க்கப்பலுக்கும், போர் விமானங்களுக்கும் சொல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மூன்றாவது சோனோபோய் AN/SSQ-36 என அழைக்கப்படுகிறது. இது, AN/SSQ-53G சோனோபோய் போன்ற செயல்திறன்களை கொண்டிருக்கிறது.