முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க அமைப்புச் செயலாளருமான டி. ஜெயக்குமார் சென்னையில் இன்று (ஏப்.14,2024) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “நான் ராயப்புரத்தில் தோற்க பாரதிய ஜனதா கட்சி உடன் கூட்டணி வைத்ததே காரணம்” என்றார். இது குறித்து பேசிய அவர், “பாரதிய ஜனதா உடன் கூட்டணி வைத்ததால்தான் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் தோற்றோம்.
ராயப்புரத்தில் கடந்த 25 ஆண்டுகளாக நான் முடிசூடா மன்னனாக திகழ்ந்தேன். பாரதிய ஜனதா கட்சி உடன் கூட்டணி வைத்ததால் தோற்றேன்.
அது ஒரு ஓடாத சைக்கிள், பைக். அ.தி.மு.க.வின் தோல்விக்கு பாரதிய ஜனதா தான் காரணம். நான் தேர்தலில் நிற்கும்போத சிறுபான்மையினர் என்னிடம் வருத்தம் தெரிவித்தனர்.
அவர்களுக்கு என் மீது கோபம் கிடையாது. பாரதிய ஜனதா கட்சி மீதுதான் கோபம். பா.ஜனதா உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்ததால், ராயப்புரத்தில் உள்ள 40 ஆயிரம் சிறுபான்மையினர் வாக்குகள் தி.மு.க.வுக்கு சென்று விட்டன.
நான் பூஜ்யத்தில் இருந்து ஆரம்பித்தேன். ஆனால் திமுக 40 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் தேர்தலை சந்தித்தது. இதுதான் நான் தோற்க காரணம்.
நான் அப்போதே சிறுபான்மை மக்களிடம் கூறினேன். நேரம் வரும்போது பா.ஜனதா கட்சியை கழற்ட்டி விட்டுவிடுவோம் என்றேன். தற்போது கழட்டி விட்டுவிட்டோம்” என்றார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலில் ஒரே கட்டமாக ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படுகின்றன.