உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 241 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆப்கன் அணி 45.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டியது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதியை நோக்கி போட்டிகள் சென்று கொண்டிருக்கும் நிலையில், இன்று புனேவில் நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. ஒப்பீட்டளவில் இலங்கை பலமான அணியாக பார்க்கப்படும் சூழலில், அந்த அணியே வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இலங்கைக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஆப்கன் அணியின் பவுலிங் மற்றும் பேட்டிங் அமைந்தது. குறிப்பாக ஆப்கன் அணியின் பேட்டிங் கிரிக்கெட் வர்ணனையாளர்களின் கவனத்தை பெற்றது. தரம் வாய்ந்த இலங்கை பவுலர்களால் ஆப்கன் விக்கெட்டுகளை உடனடியாக சாய்க்க முடியவில்லை. உலகக்கோப்பை தொடரில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று பாயின்ட்ஸ் டேபிளில் 5 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
டாஸ் வென்ற ஆப்கன் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங்கை தொடர்ந்த இலங்கை அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் மட்டுமே எடுத்தது.