சென்னை: சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் கடந்த 2020ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்றும், ரயில்வே துறையை மாநில அரசு வசம் கொடுத்துவிடுவார்களா? எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதலமைச்சர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் கேட்டுக்கொண்டிருந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட 6 மாநில முதலமைச்சர் இதில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தில் புறக்கணித்தது ஏன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். அதில், சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக விமர்சித்துள்ளார். குறிப்பாக,
“சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்கான ஒன்றிய அரசின் நிதியை இந்த பட்ஜெட்டில் நாம் மிகவும் எதிர்பார்த்திருந்தோம். 2020 கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசரமாக வந்து அடிக்கல் நாட்டிய திட்டம்தான் அது. ரூ.63 ஆயிரம் கோடி திட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்துவோம் என கடந்த 2021ம் ஆண்டு ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த திட்டதில் ஒரு ரூபாய் கூட விடுவிக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. தமிழ்நாடு அரசுதான் இந்த திட்டத்தை முடுக்கிவிட்டு செயல்படுத்தி வருகிறது. இது குறித்து கேட்டால், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டம் என்பது மாநில அரசினுடையது என்று நாடாளுமன்றத்தில் பதிலளிக்கிறார்கள். அப்படியெனில் ரயில்வே துறையை மாநில அரசுக்கு கொடுத்துவிடுவார்களா?
இந்த பட்ஜெட்டில் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான ஒப்புதல் குறித்து மத்திய அரசு மூச்சுவிடவில்லை. ஆனால் பல மாநிலங்களில் இதை விட சிறிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி வழங்கி நிதி வாரி வழங்கப்பட்டிருக்கிறது. இது எந்த விதத்தில் நியாயம்?” என்று கேள்வி எழுப்பியள்ளார்.