நடிகர் விஜய் சினிமாத்துறையில் இருந்து விலகி, அரசியல் கட்சியைத் துவங்கியுள்ளார். இந்தக் கட்சியின் கொடி மற்றும் பெயரை முதலில் அறிவித்த விஜய், பிறகு கட்சி கொடி குறித்து விளக்கம், கட்சியின் கொள்கை உள்ளிட்டவற்றை மாநாட்டில் அறிவிப்பேன் என விஜய் அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று (27ம் தேதி) விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாணி, வி.சாலை பகுதியில் நடைபெற்றுவரும் தவெக மாநாட்டிற்கு அக்கட்சியின் தலைவர் வருகை தந்தார். இவருடன் தவெகவின் தலைவர் விஜய்யுடன், தலைமை நிலையச் செயலாளர் ராஜகேசர், பொருளாளர் வெங்கட்ராமன், கொள்கைப் பரப்பு துணைச் செயலர் ஜஹீரா உள்ளிட்டோர் மேடையில் இருந்தனர்.
முதலில் மேடைக்குவந்த விஜய், பிறகு திடீரென மக்கள் கூட்டத்திற்கு நடுவில் இருந்த ராம்பில் நடந்துசென்றார். அப்போது இரு புறங்களில் இருந்து அவரது கட்சியின் தொண்டர்கள் தவெகவின் கொடி நிறத்தில் இருக்கும் துண்டுகளை வீசினர். அதனை எல்லாம் அப்படியே கையில் பிடித்து தன் தோளில் மீது போட்டுக்கொண்ட விஜய் தொண்டர்களுக்கு கை அசைத்தப்படி, முழுமையாக நடந்து சென்று பின் மேடைக்கு திரும்பினார்.
பிறகு மேடைக்கு வந்த விஜய் சில நொடிகள் தொண்டர்களைக் கண்டு கண்கலங்கி நின்றார். அதன்பிறகு மாநாட்டு பந்தலில் அமைக்கப்பட்டிருந்த 100 அடி உயர் கொடி கம்பத்தில் ரிமோர்ட் மூலம் தனது கட்சி கொடியை ஏற்றினார். அங்கு வைக்கப்பட்டிருந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் உருவப்படத்திற்கும், மொழிப்போர் தியாகிகளின் உருவப்படத்திற்கும் மலர்தூவி மரியாதை செய்தார்.
இந்த மாநாட்டில் தவெகவின் புது பாடல் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக தவெகவிற்காக ‘தமிழன் கொடி பறக்குது.. தலைவன் யுகம் பொறக்குது’ எனும் பாடல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், இன்று மாநாட்டில் ‘மண்ணை உயர்த்திட மக்களை உயர்த்திட வந்தார் நேர்மையான தலைவர்’ எனும் தவெகவின் புது பாடல் வெளியானது.