கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர் பாலத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நாடு முழுக்க போராட்டங்கள் நடந்து வருகிறது. இதற்கிடையே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராயின் மாமியார் சில பகீர் தகல்களைத் தெரிவித்துள்ளார். அதாவது சஞ்சய் நல்லவன் இல்லை என்று குறிப்பிட்ட அவர், அதேநேரம் இந்த குற்றத்தை அவன் தனியாகச் செய்திருக்க முடியாது என்றும் கூறி பகீர் கிளப்பியுள்ளார்.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி மருத்துவராக இருந்த பெண் கடந்த ஆக. 8ம் தேதி கொடூரமாகப் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்.
மருத்துவர் கொலை: இந்தச் சம்பவத்தில் போலீசார் இதுவரை ஒருவரைக் கைது செய்துள்ளனர். அதேநேரம் இந்த வழக்கில் மேலும் பலருக்குத் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டங்கள் நடந்து வருகிறது. இதற்கிடையே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராயின் மாமியார் சில பகீர் தகல்களைத் தெரிவித்துள்ளார்.
அதாவது சஞ்சய் ராய் தனது மகளை எப்போதும் அடித்துத் துன்புறுத்தி வந்தார் என்றும் இதனால் 3 மாத கருக் கலைந்ததாகவும் தெரிவித்தார். இந்த கொடூர குற்றத்தைச் செய்ததற்காக சஞ்சய் ராயை தூக்கில் கூட போடுங்கள் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், இந்த கொடூர குற்றத்தை அவனால் தனியாகச் செய்திருக்க முடியாது என்றும் இதில் மேலும் பலருக்குத் தொடர்பு இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
கைதானவரின் மாமியார்: இது தொடர்பாக சஞ்சய் ராயின் மாமியார் மேலும் கூறுகையில், “எனது மகளை அவனுக்குத் தெரியாமல் கட்டிவைத்துவிட்டோம். இருவருக்கும் இடையே மோசமான ஒரு உறவே இருந்தது. எப்போதும் அவன் எனது மகளை அடித்துத் துன்புறுத்துவான். இது குறித்து நாங்கள் போலீசாரிடம் கூட புகார் அளித்துள்ளோம். என்னைக் கூட அவன் மதித்ததே இல்லை.
கருச்சிதைவு: எனது மகளைத் திருமணம் செய்து வைத்த புதிதில் எல்லாம் சரியாக இருந்தது.. ஆனால் கொஞ்ச நாளில் எல்லாம் மாறியது. எனது மகளைத் தினமும் அடித்துத் துன்புறுத்தத் தொடங்கினான். எனது மகள் மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தபோது, இவன் தாக்கியதால் கருக் கலைந்து போனது. அப்போது கொடூரமாகத் தாக்கினான். இது குறித்து நாங்கள் போலீசாரிடமும் புகார் அளித்தோம்.
ஆனால், இந்தச் சம்பவத்தில் இருந்து எனது மகளால் மீண்டு வர முடியவில்லை. இப்போது வரை எனது மகள் நோய்வாய்ப்பட்டே இருக்கிறார். மருத்துவச் செலவைக் கூட அவன் ஏற்கவில்லை.. நான் தான் கவனித்து வருகிறேன்.
நல்லவனே இல்லை: அவன் நல்லவனே இல்லை. அவனைத் தூக்கில் போடுங்கள் அல்லது அவன் செய்த குற்றத்திற்கு என்ன தண்டனை தர வேண்டுமா அதைக் கொடுங்கள். அதற்கு நாங்கள் எதுவும் சொல்ல மாட்டோம். அவன் செய்த கொடூர குற்றத்தைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. ஆனால், அவனால் அதைத் தனியாகச் செய்ய முடியாது. கூட்டாளிகள் இருப்பார்கள். அவர்களையும் சிபிஐ விசாரித்து கைது செய்ய வேண்டும்” என்றார்.
இந்த வழக்கை முதலில் கொல்கத்தா போலீசார் விசாரித்த நிலையில், அவர்கள் இந்த விவகாரத்தை மிக மோசமாகக் கையாண்டதாக விமர்சனங்கள் எழுந்தது. இதையடுத்து இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. மேலும் உச்ச நீதிமன்றமும் இந்த வழக்கைத் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மேற்கு வங்க அரசிற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சிபிஐ விசாரணை: மருத்துவர்களுக்கு உரியப் பாதுகாப்பு வழங்க மேற்கு வங்க அரசு தவறிவிட்டது என்றும் மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்குக் கூட சுகாதாரமான சூழல் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. மேலும், மேற்கு வங்கத்தில் ஏன் வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை என்று கேள்வி எழுப்பியது. இது தொடர்பாக விசாரிக்க டாஸ்க் ஃபோர்ஸ் ஒன்றும் அமைத்து உத்தரவிட்டுள்ளது.