சென்னை: தற்போது அமைச்சராக இல்லை, அதனால் சாட்சியங்கள் கலைக்கப்படாது என்கிற உத்தரவாதத்தோடு உச்ச நீதிமன்றத்தில், செந்தில் பாலாஜி ஜாமீன் பெற்றார். எனவே மீண்டும் அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம் என்று முன்னாள் எம்பி கேசி பழனிசாமி கூறியுள்ளார்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. ஓராண்டுக்கும் மேலாக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த செந்தில் பாலாஜி தனக்கு ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் அளித்தது.
நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு கடந்த 26 ஆம் தேதி ஜாமீன் வழங்கி தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து, 15 மாதங்களுக்குப் பின்னர் செந்தில் பாலாஜி சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையாகி உள்ளார். சிறையில் இருந்து 471 நாட்களுக்கு பிறகு வெளிவந்த செந்தில் பாலாஜிக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். செந்தில் பாலாஜியின் தியாகம் பெரிது என முதல்வர் மு.க ஸ்டாலினும் நெகிழ்ச்சி பட தெரிவித்து இருந்தார்.
தற்போது செந்தில் பாலாஜிக்கு அமைச்சரவையில் மீண்டும் இடம் கிடைத்துள்ளது. நேற்று முன் தினம் அமைச்சரவையில் புதிதாக 4 அமைச்சர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். இதில் செந்தில் பாலாஜியும் ஒருவர். செந்தில் பாலாஜிக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகியுள்ள நிலையில், அவரது அமைச்சர் பதவிக்கு சிக்கல் உள்ளதாக முன்னாள் எம்பி கேசி பழனிசாகி கூறியுள்ளார்.
கேசி பழனிசாமி தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:- உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தற்போது அமைச்சராக இல்லை, அதனால் சாட்சியங்கள் கலைக்கப்படாது என்கிற உத்தரவாதத்தோடு ஜாமீன் பெற்றார். ஆனால் மீண்டும் அமைச்சரான காரணத்தினால் அவர் சாட்சியை கலைப்பார், அதனால் இவருக்கு ஜாமீன் ரத்து செய்யப்பட வேண்டும் என்கிற மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனவே மீண்டும் அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். ஜாமினில் வெளியே வந்த பிறகு ஏற்படுத்திய ஆரவாரங்களும், மு.க ஸ்டாலினின் அபரிவிதமான அன்பும் செந்தில் பாலாஜிக்கு பாதகமாக அமையலாம். மேலும் தனி நீதிபதி இந்த வழக்கை விசாரித்து ஓராண்டுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்கிற முனைப்புகள், வருகிற சட்டமன்றத் தேர்தலுக்குள் இந்த வழக்கில் ஒரு முடிவு எட்டப்பட வேண்டும் என்கிற நோக்கம் கொண்டுள்ளதாக அமைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, செந்தில் பாலாஜிக்கு எதிரான ஊழல் வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிபதியை நியமிக்க வேண்டும் என நேற்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிபதியை நியமிக்குமாறு சென்னை ஹைகோர்ட்டிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது விசாரிக்கும் அமர்வுக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதால் புதிய நீதிபதியை நியமிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.