ரோம்: இத்தாலியில் நடைபெற்ற G7 உச்சி மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது, போருக்கான தீர்வு பேச்சுவார்த்தைதான் என்று கூறியுள்ளார். சோவியத் காலத்தில் அதற்கு போட்டியாக உருவாக்கப்பட்டதுதான் நேட்டோ. ஆனால், சோவியத் உடைந்து 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் கூட இன்னமும் நேட்டோ விரிவடைந்து கொண்டே இருக்கிறது. இதுதான் ரஷ்யா-உக்ரைன் போருக்கான தொடக்கப் புள்ளி. கொஞ்சம் கொஞ்சமாக கிழக்கு நோக்கி தனது ஆதிக்கத்தை விரிவாக்கிக் கொண்டே வந்த அமெரிக்காவின் நேட்டோ, கடைசியாக உக்ரைனுக்கு வந்து நின்றது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க ஆதரவாளர்.
எனவே, நேட்டோவுக்கு அனுமதியளித்தார். இது ரஷ்யாவுக்கு எரிச்சலை கிளப்பியது. உக்ரைன் ரஷ்யாவுக்கு பக்கத்தில் உள்ள நாடு. ஏற்கெனவே ரஷ்யாவுக்கும் அமெரிக்காவும் ஏழரை சனி. இப்படி இருக்கும்போது உக்ரைன் நேட்டோவில் இணைந்துவிட்டால் அமெரிக்க படைகள் நேரடியாக ரஷ்ய எல்லையில் குவிக்கப்படும். இது பெரும் அச்சுறுத்தல். எனவே ரஷ்யா போரை அறிவித்தது. கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரியில் இந்த போர் தொடங்கியது. 2 வாரங்கள்தான் போர் நீடிக்கும் என்று ரஷ்யா சொன்னது. ஆனால், அமெரிக்கா கொடுத்த ஆயுத உதவியால் 2 ஆண்டுகள் கடந்து இப்போதுவரை உக்ரைன்-ரஷ்யா போர் நீடித்து வருகிறது. இதுவரை ரூ.16 ஆயிரம் கோடி அளவுக்கு மனிதாபிமான உதவியாகவும், ரூ.24 ஆயிரம் கோடி வளர்ச்சி நிதி என்கிற பெயரிலும், ரூ.1.9 லட்சம் கோடி நேரடி உதவியாகவும் அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கியிருக்கிறது. போர் சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இத்தாலியில் நடைபெற்ற G7 உச்சி மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது, போருக்கான தீர்வு பேச்சுவார்த்தைதான் என்று கூறியுள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, “வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உக்ரைனுடன் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இந்தியா ஆர்வமாக உள்ளது. போர் குறித்து, இந்தியா மனிதாபிமானத்தை மையமாகக் கொண்ட அணுகுமுறையை தீர்வு என்று நம்புகிறது. பேச்சுவார்த்தைதான் அமைதிக்கான வழி என்று நம்புகிறது” என்று கூறியுள்ளார்.
அதேபோல பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானையும் மோடி சந்தித்திருக்கிறார். இது குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், “பாதுகாப்பு, அணுசக்தி, விண்வெளி, கல்வி, காலநிலை மாற்றம், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, முக்கியமான தொழில்நுட்பங்கள், மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட துறைகளில் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இரு தலைவர்களும் கலந்தாலோசித்தனர். முக்கிய உலகளாவிய மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்” என்று கூறியுள்ளார்.
இவர்களை தொடர்ந்து பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் பிரதமர் மோடி கலந்துரையாடியுள்ளார். மூன்றாவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் மோடி இந்த தலைவர்கள் சந்திப்பதை இதுவே முதல்முறையாகும். சர்வதேச அளவில் உக்ரைன் போர் மிகுந்த கவனம் பெற்றிருக்கும் நிலையில், பிரதமர் மோடி சந்திப்பு மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது.