மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த வாரம் (டிச.4) சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. விடிய விடிய கனமழை பெய்தது.
இதனால் சாலை, வீடுகளில் வெள்ள நீர் தேங்கியது. மழை நீர் தேங்கியதால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் டிச.11ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன.
இந்த நிலையில் முதல்கட்டமாக ரூ.5060 கோடி நிவாரணத் தொகையாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோரியிருந்தார். தொடர்ந்து, நிவாரணத் தொகையாக மத்திய அரசு ரூ.480 கோடி விடுவித்தது. தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழு ஆய்வு நடத்தியது.
இந்த நிலையில், இன்று மத்திய குழுவுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தற்காலிக நிவாரணத் தொகையாக ரூ.7033 கோடி வழங்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து, ‘புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்திட நிரந்தர நிவாரணத் தொகையாக ரூ.12,659 கோடி வழங்கிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.