டெல்லி: மத்திய பாஜக கூட்டணி அரசின் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா, வக்பு வாரியத்தின் அதிகாரத்தைப் பறிப்பதால் கடுமையாக எதிர்க்கிறேன் என்று லோக்சபாவில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரைவைகோ எம்பி தெரிவித்தார்.
லோக்சபாவில் துரைவைகோ எம்பி பேசியதாவது: இஸ்லாமியர்களின் உரிமையை பறிக்கும் இந்த சட்டத்தை, ஜனநாயக மாண்புக்கு எதிராக இருக்கும் இந்த சட்டத்தை, மதசார்பின்மைக்கு எதிராக இருக்கும் இந்த சட்டத்தை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நான் எதிர்க்கிறேன். இன்னல் முஸ்ஸத்திகீன வல் முஸ்ஸத்திகாத் வ அக்ரளுல்லாஹ கர்ளன் ஹஸ்னன் யுளா அஃபு லஹும் வலஹும் அஜ்ருன் கரீம் என்று அரபி மொழியில் திருகுர்ஆன் வசனம் 57:18 சொல்கின்றது. ஏழை எளிய ஆதரவற்றோருக்கு தானதர்மம் உள்ளிட்ட தொண்டுகளை செய்வது, இறைவனுக்கே கடன் கொடுப்பதற்கு சமமானது என்பதுதான் இதன் பொருள்.
திருகுர்ஆனில் உள்ள எல்லாம் வல்ல அல்லாஹ்வின் இந்த வார்த்தைகளை செயல்படுத்துவதற்கும், இஸ்லாமியர்கள் இறை பணிகளை மேற்கொள்வதற்கும் தான் வக்பு சொத்துகள் உருவாக்கப்பட்டன.
வக்பு வாரிய சொத்துகள்
இந்த வக்பு சொத்துகளின் மூலம் தான் மசூதிகள், தர்காக்கள், மதரசாக்கள், கபர்ஸ்தான்கள் உருவாக்கப்பட்டன. பல வக்பு சொத்துக்களின் பயனாளிகளாக இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, இந்துக்கள் உள்ளிட்ட எல்லா மதத்தினரும் உள்ளனர். வக்பு வாரியத்துக்கு சொந்தமான நிலங்களில் இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் என பலரும் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். பல வக்பு சொத்துகளில் அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. பேருந்து நிலையங்கள் போன்ற பொதுமக்களின் பயன்பாட்டு இடங்களும் உள்ளன.
தமிழ் மண்ணின் சிறப்பு
இஸ்லாமிய மன்னர்கள், செல்வந்தர்கள் மட்டுமல்ல, எங்கள் தமிழ்நாட்டில் பல்வேறு சமூகத்தினரின் கொடையாளர்களும் நல்லெண்ண அடிப்படையில் இஸ்லாமியர்களின் ஆன்மீகப் பணிகளுக்காக தங்கள் சொத்துக்களை வக்பு செய்து தானமாக கொடுத்துள்ளனர்.இது எங்கள் தமிழ் மண்ணின் வரலாற்றுச் சிறப்பாகும். இதுபோல் நாடெங்கிலும் பல உதாரணங்களை கூற முடியும்.
வக்பு மசோதாவுக்கு எதிர்ப்பு ஏன்?
இவை எல்லாம் நம் நாட்டின் ஒற்றுமையையும், பன்முகத்தன்மையையும் வெளிகாட்டுகிறது .வக்பு சொத்துகளை நிர்வகிக்கும் வக்பு வாரியத்தின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் உள்ளதால் நான் இந்த வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன்.
வாரியத்தின் அதிகாரம் பறிப்பு
இந்த வக்பு சட்ட திருத்த மசோதாவில் உள்ள பிழைகளில் மற்றும் குழப்பங்களில் சிலவற்றை நான் இங்கு கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். ஒருவரின் சொத்து வக்பு வாரியத்தில் உள்ளதாக கேள்வி எழுகிறபோது, அதை தெளிவுபடுத்தும் உரிமை வக்பு வாரியத்திற்கு உள்ளது. ஆனால் இந்த சட்டத்திருத்தத்தின் மூலமாக அந்த அதிகாரத்தை அவர்களிடம் இருந்து பிடுங்குவது என்ன நியாயம்?
மாவட்ட ஆட்சியருக்கா அதிகாரம்?
வக்பு வாரிய தீர்ப்பாயம் தவறு செய்தால், அதற்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்லும் நடைமுறை உள்ளது. அப்படி இருக்கும் போது வக்பு வாரியத்துக்கு உள்ள தடையில்லா சான்றிதழ் கொடுக்கும் அதிகாரத்தை பறித்து, மாவட்ட ஆட்சியருக்கு கொடுக்க நினைப்பது தவறானது.
கொடையாளர்களை மத அடிப்படையில் பிரிப்பதா?
அது போல, வக்பு வாரிய நிர்வாகத்திற்கு சொத்துக்களை தானம் செய்பவர்கள், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் இஸ்லாத்தை கடைபிடிக்கும் நபர்களாக இருக்க வேண்டும் என்று புதிய சட்டதிருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொடையாளர்களை மதத்தின் அடைப்படையில் பிரிப்பது அபத்தமானது. இது வக்புவின் நோக்கத்தை அடியோடு சிதைக்கும் வகையில் இருக்கிறது.
நேற்று 02.04.2025 நள்ளிரவு வக்பு சட்ட திருத்த மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை..!
நன்றி சபாநாயகர் அவர்களே,
இஸ்லாமியர்களின் உரிமையை பறிக்கும் இந்த சட்டத்தை, ஜனநாயக மாண்புக்கு எதிராக இருக்கும் இந்த சட்டத்தை, மதசார்பின்மைக்கு எதிராக இருக்கும் இந்த சட்டத்தை மறுமலர்ச்சி… pic.twitter.com/fMYZ8qjP70— Durai Vaiko (@duraivaikooffl) April 3, 2025
மாற்று மதத்தினரை நியமிக்கலாமா?
மேலும், வக்பு வாரியத்தில் இஸ்லாமியர்கள் அல்லாத இரண்டு மாற்று மதத்தினரை நிர்வாகிகளாக சேர்க்க திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனது வீட்டை பராமரிக்க என் குடும்பத்திற்கு தொடர்பில்லாத ஒருவரை யாராவது நியமித்தால் அதை நான் எப்படி ஏற்க முடியும்?
அறவே ஏற்க முடியாத திருத்தம்
இஸ்லாமியர்களின் இறை சொத்துக்களான, வக்பு சொத்துக்களை இஸ்லாமியர்கள்தான் பராமரிக்க வேண்டும். அதுதான் நீதி. அவர்களுக்குதான் அதன் முழுமையான நோக்கங்கள் புரியும் . திருப்பதி கோவில் நிர்வாகத்தில் ஒரு கிறிஸ்தவரை நியமிப்பதும், சீக்கியரின் பொற்கோவில் நிர்வாகத்தில் ஒரு இஸ்லாமியரை நியமிப்பதும் எவ்வளவு தவறானதோ அது போலதான் இதுவும். எனவே இதனை அறவே ஏற்க முடியாது.
தனிச்சிறப்புமிக்க நாடு
இந்த நாட்டின் விடுதலைக்காக லட்சோப லட்ச இஸ்லாமியர்கள் தங்கள் இன்னுயிரை தந்தார்கள், தங்கள் சொத்துக்களை போராட்டக் களங்களுக்கு வாரி வழங்கினார்கள் என்பதை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். உலகில் உள்ள அத்தனை மதங்களும் நம்முடைய இந்திய திருநாட்டில் பின்பற்றப்படுகிறது. அதுதான் நமது இந்தியாவை உலகின் தனிச்சிறப்பு மிக்க நாடாக காட்டுகிறது. உலகம் நமது நாட்டை பெருமிதத்துடன் பார்க்கிறது .
மதநல்லிணக்க தமிழ்நாடு
உலகிலேயே இந்தோனேசியாவிற்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழ்கிறார்கள். அவர்களை அச்சமின்றி வாழ வைப்பது, பெரும்பான்மையினராகிய நமது கடமையாகும்.கோவில்களில் ஆறுகால பூஜைகள் நடக்கட்டும், மசூதிகளில் ஐவேளை தொழுகைகள் நடக்கட்டும், தேவாலயங்களில் ஜெப கூட்டங்கள் நடக்கட்டும், அதேபோல பகுத்தறிவு பிரச்சாரமும் நடக்கட்டும் என்று கடந்த அறுபது ஆண்டுகளாக தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எங்கும் முழங்கி, மதநல்லிணக்கத்திற்கு அரணாக விளங்குபவர் எங்கள் தலைவர் வைகோ அவர்கள்.
இஸ்லாமியரை அச்சுறுத்துகிறது
அவர் வலியுறுத்திய மதநல்லிணக்கத்தை நாடு முழுவதும் கொண்டு சேர்த்து இஸ்லாமியர்களை அச்சுறுத்தும் வகையில் உள்ள இந்த சட்டத்தை திரும்ப பெற்று அவர்களின் உரிமையைக் காக்க, எனது இஸ்லாமிய சகோதர சகோதரிகளின் சார்பாக, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பாக நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு துரை வைகோ பேசினார்.