மாலி: மாலத்தீவிலிருந்து இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற்றப்பட்டிருந்தது பெரும் விவாதங்களை கிளப்பியிருந்த நிலையில், “வெளிநாட்டுப் படைகள் வெளியேற்றப்பட்டதன் மூலம் மாலத்தீவின் பாதுகாப்பு இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கை எட்டப்பட்டுள்ளது” என அந்நாட்டு அதிபர் முய்ஸு கூறியிருக்கிறார்.
மாலத்தீவு அதிபர் முய்ஜு அடிப்படையில் சீன ஆதரவாளர். கடந்த ஆண்டு நடைபெற்ற அந்நாட்டு நாடாளுமன்ற தேர்தலில், “நாங்கள் வெற்றி பெற்றால் மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்களை வெளியேற்றுவோம்” என்று வெளிப்படையாகவே கூறி போட்டியிட்டார். அதில் வெற்றியும் பெற்றார். இதனையடுத்து தற்போது அங்கிருந்த நமது 90 ராணுவ வீரர்கள் முழுவதுமாக வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.
அதாவது, மாலத்தீவுக்கு இந்தியா சார்பில், டோர்னியர் 228 கடல் ரோந்து விமானம் மற்றும் இரண்டு எச்ஏஎல் துருவ் ஹெலிகாப்டர்கள் வழங்கப்பட்டிருந்தன. இதனை பராமரிக்கவும், இயக்கவும் மாலத்தீவு ராணுவத்திற்கு உதவ சுமார் 90 இந்திய ராணுவ வீரர்கள் அங்கு இருந்து வந்தனர். ஆனால் இவர்கள் நீண்ட காலமாக மாலத்தீவில் இருப்பது, தங்களது இறையாண்மையை பாதிப்பதாக கூறி வீரர்கள் அனைவரையும் வெளியேற்ற அந்நாட்டு அதிபர் முகமது முய்ஜு உத்தரவிட்டார்.
இதனையடுத்து இந்திய ராணுவ வீரர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இது தவிர, இந்தியாவுடன் போடப்பட்ட ‘ஹைட்ரோகிராஃபிக் சர்வே’ ஒப்பந்தத்தை புதுப்பிக்க போவதில்லை என்றும் மாலத்தீவு அறிவித்திருந்தது. அதாவது மாலத்தீவில் உள்ள நீர்நிலைகள், பாறைகள், கடற்கரையோரங்கள், கடல் நீரோட்டங்கள் மற்றும் அலை அளவுகள் ஆகியவற்றைப் பற்றி விரிவான ஆய்வை நடத்துவதே ‘ஹைட்ரோகிராஃபிக் சர்வே’ ஒப்பந்தமாகும்.
கடந்த 2018 முதல் இந்த ஒப்பந்தம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால் தற்போது மாலத்தீவு அரசு இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்க போவதில்லை என்று கூறிவிட்டது. இதற்கெல்லாம் ஹைலைட்டாக சீன உளவு கப்பல்களுக்கு மாலத்தீவு தொடர்ந்து அனுமதி அளித்து வருகிறது. இலங்கையும் உளவு கப்பல் விவகாரத்தில் இந்தியாவின் பேச்சை கேட்கவில்லை. அந்த வரிசையில் தற்போது மாலத்தீவும் இணைந்திருப்பது இந்தியாவுக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்பட்டது.
இந்த முரண்பாடுகளை சரி செய்ய இந்திய அரசு சமீபத்தில் முன் வந்து சில முயற்சிகளை மேற்கொண்டது. அதாவது, பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் முய்ஸுவுக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. பதவியேற்பு விழா முடிந்த பின்னர், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருந்து அளித்திருந்தார். இந்த விருந்தில் மோடிக்கு பக்கத்தில் முய்ஜு அமர்ந்திருந்தார். இடதுபுறம் முய்ஜுவும், வலதுபுறம் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் அமர்ந்திருந்தனர்.
இது சீனாவுக்கு ஒரு வலுவான மெசேஜ் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியிருந்தனர். கடந்த காலங்களில் சீனா வசம் மலாத்தீவும், இலங்கையும் இருந்திருக்கலாம். ஆனால், இனி வரும் நாட்களில் இரண்டு நாடுகளும் இந்திய ஆதரவு நிலையை எடுக்கக்கூடும். அதற்கான முயற்சியை மோடியின் 3.O அரசு மேற்கொள்ளும் என்பதைதான் இந்த புகைப்படம் காட்டுகிறது என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
இப்படி இருக்கையில் இந்தியாவை மீண்டும் எரிச்சலடைய வைக்கும் விதத்தில் முய்ஸு பேச தொடங்கியுள்ளார். மாலைதீவின் 59வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய முய்ஸு,
“மாலத்தீவிலிருந்து வெளிநாட்டுப் படைகள் வெளியேற்றப்பட்டதன் மூலம், பாதுகாப்பு இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையை நாம் எடுத்திருக்கிறோம். சீருடையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வெளிநாட்டுப் படையினர் மாலதீவில் இருக்க மாட்டார்கள் என நான் உத்தரவாதம் அளிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
முய்ஸுவுக்கு பின்னால் சீனா இருக்கிறது. இதனால்தான் இந்தியா செய்த உதவிகளை எல்லாம் மறந்துவிட்டு அவர் இவ்வாறு பேசுகிறார் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.