திருவனந்தபுரம்: துபாயில் இருந்து கேரளாவின் மலப்புரம் மாவட்டத்திற்கு திரும்பிய நபருக்கு குரங்கம்மை தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் எம்-பாக்ஸ் வைரஸ் தொற்றால் 2வது நபர் பாதிக்கப்பட்டுள்ளார்.
மத்திய மற்றும் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில், எம் – பாக்ஸ் எனப்படும் குரங்கம்மை தொற்று வேகமாக பரவி வருவதை அடுத்து, உலகளவில் குரங்கு அம்மை தொற்றை பொது சுகாதார அவசரநிலையாக, உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது.
காய்ச்சல், குளிர் காய்ச்சல் தலைவலி, வீக்கம், உடல் வலி, தசைவலி போன்றவை எம்-பாக்ஸ் வைரஸ் பரவலின் அறிகுறிகள் ஆகும். மிகத் தீவிரமான பாதிப்பு உள்ளவர்களுக்கு முகம், கைகள், மார்பு மற்றும் பிறப்புறுப்புகளில் புண்கள் ஏற்படக்கூடும்.
இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த 38 வயது நபருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவின் மலப்புரத்தைச் சேர்ந்த நபர் துபாயில் இருந்து அண்மையில் கேரளா வந்துள்ளார். அவருக்கு எம்-பாக்ஸ் அறிகுறிகள் தென்பட்ட நிலையில், அவர் அடையாளம் காணப்பட்டு, நேற்றைய தினம் மருத்துவமனையில் தனிப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியானது.
அவருக்கு ரத்த பரிசோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், இன்று அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. மலப்புரம் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.
இதையடுத்து, கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழ்நாட்டு எல்லை பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. குரங்கம்மை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மத்திய அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது.
ஏற்கனவே , இந்தியாவில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவெ இந்தியாவில் கண்டறிய நபருக்கு Clade 2 வகை தொற்றாக இருப்பதால் அச்சம் கொள்ள தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்திருந்தது.