டெல்லி: மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது முஸ்லிம் பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தியதாக மத்திய அமைச்சரும் மாநிலங்களவை பாஜக தலைவருமான ஜேபி நட்டா குற்றம்சாட்டியுள்ளார்.
வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா நாட்டின் நலனுக்காக மட்டுமே கொண்டு வரப்படுகிறது. எந்த கட்சியின் நலனுக்காகவும் கொண்டு வரப்படவில்லை என்றும் மத்திய அமைச்சர் ஜேபி நட்டா ராஜ்யசபாவில் பேசியுள்ளார்.
வக்பு வாரிய மசோதா
வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே லோக்சபாவில் நிறைவேறியது. இந்த மசோதா இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து உரையாற்றினர்.
வக்ஃப் மசோதா மீதான விவாதத்தில் மத்திய அமைச்சர் ஜேபி நட்டா பேசுகையில், “நாட்டின் நலனுக்காகவே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. 25 மாநில வக்ஃப் வாரியங்களுடன் கலந்து ஆலோசித்தோம். நாடாளுமன்றக் கூட்டுக்குழுவினர் நாட்டின் 25 முக்கிய நகரங்களுக்கு சென்று கருத்துகளைப் பெற்றனர்.
காங்கிரஸ் ஆட்சியில்
ஆனால், மசோதா மீதான விவாதத்தில் இருந்து திசைதிருப்ப எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன. அவர்களிடம் விவாதிப்பதற்கு என உண்மையான எந்த விஷயமும் இல்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வக்ப் சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்பட்ட போது அமைக்கப்பட்ட கூட்டுக்குழுவில் 13 பேர் மட்டுமே இருந்தனர். தற்போது 31 பேர் உள்ளனர்.
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது, 2013ல் கொண்டு வரப்பட்ட வக்ப் குறித்த மசோதா, 2014ல் உங்களை காப்பாற்றவில்லை. எதிர்க்கட்சிகள் இந்த மசோதா குறித்து பொய்த் தகவலை பரப்புகின்றன. இது நிராகரிக்கப்பட வேண்டும். இந்த மசோதா விவகாரத்தில் ஜனநாயக முறைகளை மோடி அரசு பின்பற்றுகிறது.