கலித்தொகையில் ஜல்லிக்கட்டு பற்றிய குறிப்புகள் இருப்பதாக டி.எஸ்.கிருஷ்ணன் என்பவர் எழுதிய ட்விட்டர் பதிவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பகிர்ந்துள்ளார்.
ஜல்லிக்கட்டு என்ற சனாதனத் திருநாள் என்ற தலைப்பில் கிருஷ்ணன் என்பவர் ட்விட்டரில் எழுதிய பதிவில், “சங்க காலத்திலிருந்து கொண்டாடப்படும் ஜல்லிக்கட்டு என்ற ஏறு தழுவுதல் விழாவைப் பற்றி கலித்தொகை விரிவான குறிப்புகளைத் தருகிறது. முதலில் தெய்வ வழிபாடு செய்த பிறகே விழா தொடங்குகிறது. ஸ்டேடியத்தில் அல்ல” என்று எழுதியுள்ளார்.
இந்தப் பதிவை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பகிர்ந்து தனது கருத்தையும் கூறியுள்ளார். அதில், “கலித்தொகையில் பல உருவகங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஆபரணங்கள், சின்னங்கள், தனித்துவமான அம்சங்கள் என போன்றவை எல்லாம் பலராமர், ஸ்ரீகிருஷ்ணர், சிவன், முருகன் ஆகியோருடன் தொடர்புடையவை. அவை அந்தக் கால மக்களின் வாழ்க்கையின் அங்கமாக இருந்தன.” என்று குறிப்பிட்டுள்ளார்.
“அந்த காலகட்ட வாழ்க்கையை வேறுபடுத்திப் பார்ப்பது குறும்புத்தனமானது, தவறான நோக்கமும், பிரிவினைவாதமும் ஆகும் என்று டி.எஸ்.கிருஷ்ணன் காட்டுகிறார்” எனவும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார்.
மேலும் டி.எஸ்.கிருஷ்ணன் கடந்த ஆண்டு எழுதிய பதிவு ஒன்றையும் அமைச்சர் நிர்மலா சீதாரமன் ஷேர் செய்திருக்கிறார். அதில், “பொங்கலைப் போலவே ஜல்லிக்கட்டும் ஹிந்து சமயத்தைச் சேர்ந்த வீர விழாவாகும். சங்க இலக்கியமான கலித்தொகை, ஜல்லிக்கட்டுக் காளைகளோடு நமது கடவுள்களை ஒப்பிட்டு ஒரு பாடல் மூலம் அழகாக வர்ணிக்கிறது” என்கிறார் டி.எஸ்.கிருஷ்ணன்.
இதைப் பற்றித் தனது கருத்தைக் கூறியுள்ள அமைச்சர் நிர்மலா, “சங்க கால இலக்கியப் படைப்பான கலித்தொகையில் பலராமர், ஸ்ரீகிருஷ்ணர், மகாதேவர் மற்றும் முருகன் போன்ற கடவுள்களின் தோல் நிறத்துடன் காளைகள் எவ்வாறு ஒப்பிடப்பட்டன என்பதைக் அறிஞர் டி.எஸ்.கிருஷ்ணன் சுட்டிக்காட்டுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.