திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவு மீட்பு பணிகளில் முழுக்க முழுக்க தமிழர்கள் பலர் களமிறங்கி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக நாம் நேரடியாக பெற்ற சில முக்கியமான தகவல்களை இங்கே வழங்கி உள்ளோம்.
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அங்கே இதுவரை 280 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் கிட்டத்தட்ட 1000 பேர் வரை காணவில்லை. அங்கே ஏற்பட்ட நிலச்சரிவில் 3 கிராமங்கள் அப்படியே காணாமல் போய் உள்ளன.
அங்கே மீட்பு பணிகளை மாநில அரசின் பேரிடர் மீட்பு படைகள், தேசிய பேரிடர் மீட்பு படைகள் களமிறங்கி தீவிரமாக செய்து வருகின்றனர். இதற்கு இடையே கூட்டம் கூட்டமாக தமிழர்கள் அங்கே மீட்பு பணிகளை செய்து வருகின்றனர். இது தொடர்பாக நேரடியாக வயநாட்டு மக்களிடம் ஒன் இந்தியா சார்பாக பேசினோம்.
வயநாடு பொதுவாக தமிழர்கள் அதிகம் உள்ள பகுதி. மூன்று மாநிலங்கள் இணையம் இடம் என்பதால் இங்கே தமிழர்கள் அதிகம் உள்ளனர். அதே சமயம் இங்கே நிலச்சரிவு என்று கேட்டதும் பல நூறு தமிழர்கள் அங்கே குவிந்து உள்ளனர்.
முக்கியமாக கன்னியாகுமரியில் இருந்து லோடு இறக்க, ஏற்ற வந்த லாரி டிரைவர்கள் பலர் அங்கே உள்ளனர். இவர்கள்தான் மீட்பு பணிகளை மேற்கொள்கின்றனர். இவர்கள் மீட்பு பணிகளை மேற்கொள்கின்றனர் என்று சொல்வதற்கு ஒரு காரணம் உள்ளது.. அங்கே நிலச்சரிவு மண்ணை தோண்டுவது தொடங்கி ஜேசிபி இயக்குவது, லாரியில் சேற்றை ஏற்றிக்கொண்டு செல்வது போன்ற கடினமான வேலைகளை செய்வது தமிழர்கள்தான்.
அங்கே இடிபாடுகளுக்கு இடையே கேட்கும் குரல்கள் பெரும்பாலும் தமிழ் குரல்களாகவே இருக்கின்றன. கேரளாவில் தமிழர்கள் பலர் இது போன்ற கடினமான பணிகளை செய்வது உண்டு. அந்த பணியாளர்கள்தான் தற்போது மீட்பு பணிகளிலும் முதல் ஆளாக வந்து கரம் கொடுத்து உள்ளனர்.
நிலச்சரிவு பற்றிய முக்கிய விவரங்கள்: வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு தொடர்பாக பல்வேறு வதந்திகளும் பரவ தொடங்கி உள்ளன. அதோடு வயநாட்டில் முழுக்க எல்லா பகுதிகளிலும் நிலச்சரிவு போல செய்திகளும் வருகின்றன. ஆனால் அதில் எல்லாம் உண்மை இல்லை. வயநாடு நிலச்சரிவு தொடர்பான முக்கியமான விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.
1. மேப்பாடி, முண்டக்காய் டவுன் மற்றும் சூரல் மாலா ஆகிய இடங்களில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவுகளில் மக்கள் பலர் சிக்கி உள்ளனர். 1000 பேரை இதுவரை அங்கே காணவில்லை.
2. சுல்தான் பத்தேரி, கல்பேட்டா போன்ற இடங்களில் நிலச்சரிவு இல்லை. அதற்கான சுவடு கூட இல்லை. ஒப்பீட்டளவில் இவை கொஞ்சம் சமதளமான இடங்கள்.
3. அங்கே சரியாக நிலச்சரிவு ஏற்பட்ட மூன்று பகுதிகள் இந்த புகைப்படத்தில் கொடுக்கப்பட்டு உள்ளன.
4. இரண்டு முறை அங்கே நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. கேரளாவின் வயநாடு பகுதியில் நேற்று இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. அதேபோல் இன்று மீண்டும் அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதிக வீடுகள் உள்ள பகுதியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
5. இப்போது வரை பலி எண்ணிக்கை 280+. ஆனால் அங்கு பலர் பலியாகி இருக்கலாம் என்று அச்சம் தெரிவிக்கப்படுகிறது. எண்ணிக்கை 600ஐ தாண்டலாம் (குறைந்தபட்சம்)
6. கிட்டத்தட்ட 400 குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கி உள்ளன. இன்று அதிகாலை மேப்பாடி, முண்டக்காய் டவுன் மற்றும் சூரல் மாலா ஆகிய இடங்களில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவுகளில்தான் அதிக பேர் சிக்கி உள்ளனர்.
7. 150க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எப்படி 1000 பேர் கணக்கு என்று கேட்கலாம். 400 குடும்பங்கள் கணக்கு வைத்து.. கிட்டத்தட்ட 1000 பேருக்கும் அதிகமானோரை இதுவரை அங்கே காணவில்லை என்று உள்ளூர் கணக்குகள் சொல்கின்றன .