கோவை: தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து கோவை ஐடி ஹப்பாக உருவாகி வருகிறது. ஐடி நிறுவனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் இயங்கி வரும் ஒரு ஐடி நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு ரூ.14.5 கோடி போனஸ் வழங்குவதாக அறிவித்து இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
கோவை மாவட்டம் ஐடி ஹப்பாக உருவாகி வருகிறது. தமிழ்நாடு அரசு சார்பில் டைடில் பார்க், எல்காட் வளாகங்கள் திறக்கப்பட்டுள்ளன. பல வெளிநாட்டு நிறுவனங்கள் கோவையை நோக்கி படையெடுத்து வருகின்றன. இதனால் கோவையில் 17.17 ஏக்கர் பரப்பளவில் புதிய ஐடி பூங்கா அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் கோவை, மாவட்டத்தைத் தலைமையிடமாக கொண்டு கோவை.கோ (Kovai.co) என்கிற முன்னணி ஐடி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் தான் தற்போது தங்களிடம் பணியாற்றி வரும். 140 ஊழியர்களுக்கு மொத்தம் டாலர் 1.62 மில்லியன்.. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 14.5 கோடி போனஸ் வழங்குவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ” ‘ஒன்றாக நாம் வளர்கிறோம்’ (Together We Grow) என்ற திட்டத்தின் கீழ், டிசம்பர் 31, 2022, அல்லது அதற்கு முன்பு எங்கள் நிறுவனத்தில் பணியில் இணைந்த அனைத்து ஊழியர்களும், தங்களின் மூன்று ஆண்டு கால சேவை முடித்தவுடன், அவர்களின் மொத்த ஆண்டு சம்பளத்தில் 50% போனஸாக பெறுவார்கள். முதல் கட்டமாக 80-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், ஜனவரி 31 தேதியன்று தங்களது மாத ஊதியத்துடன் போனஸ் பெற்றுள்ளனர்.” என்று கூறப்பட்டுள்ளது .
இதுகுறித்து கோவை.கோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனர் சரவணக்குமார் கூறுகையில், “நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், லாபத்திற்கும் பங்களிக்கும் ஊழியர்களுக்கு வெகுமதி அளிக்கப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். ஊழியர்களுடன் நிறுவனத்தின் செல்வத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான வழிகளை கண்டுபிடிப்பது என் நீண்டநாள் கனவாக இருந்து வந்தது.
நாங்கள் ஊழியர்களுக்கு வெகுமதிப்படுத்தும் முறைகளை ஆராயும் போது, முதலில் பங்கு உரிமைத் திட்டங்கள் (Employee Stock Ownership Plans – ESOPs) அல்லது பங்குகளை (Shares ) வழங்கும் வாய்ப்புகள் குறித்து ஆலோசித்தோம். ஆனால், அவை காகித பணமாகவே இருக்கும். ஊழியர்களுக்கு உண்மையான பலனை அளிக்க வேண்டுமெனில், நிறுவனம் வெளிப்படையான முதலீட்டை (External Capital) திரட்ட வேண்டும். இல்லையென்றால் பங்குகளை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.
இதனால், நாங்கள் ஊழியர்களுக்கு நேரடியாக பணத்தை போனஸ் அடிப்படையில் வழங்க முடிவு செய்தோம். எங்கள் பணியாளர்கள் அதை தங்கள் தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்ள முடியும். வங்கி கடனை அடைப்பதற்கும், வீடு வாங்க முன்பணம் செலுத்துவதற்கும், அல்லது அவர்களின் தேவைக்கேற்ப முதலீடு செய்ய இதைப் பயன்படுத்தலாம்,” என்றார்.
கோவை.கோ என்பது B2B SaaS (Software as a Service) ஐடி நிறுவனம் ஆகும். இதன் BizTalk360, Document360, மற்றும் Turbo360 ஆகிய மூன்று முக்கிய சேவைகள் உலகளவில் 2,500க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிறுவனம் 2023ஆம் ஆண்டில்16 மில்லியன் டாலர் ஆண்டு வருவாய் (Annual Recurring Revenue – ARR) ஈட்டியுள்ளது.
இந்த நிறுவனத்துக்கு லண்டன் (UK), சென்னை மற்றும் கோயம்புத்தூரில் அலுவலகங்கள் உள்ளன. மொத்தம் 260க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகிறார்கள். சமீபத்தில், பெங்களூரைச் சேர்ந்த ‘Floik’ நிறுவனத்தை கோவை.கோ கைப்பற்றியதது குறிப்பிடத்தக்கது.