டெல்லி: அமெரிக்காவின் ஒற்றை பிடிவாரண்ட் ஒட்டுமொத்த அதானி குழுமத்தின் சர்வதேச சாம்ராஜ்யத்தின் எதிர்காலங்களை பெரும் கேள்விக்குள்ளாக்கிவிட்டிருக்கிறது. கென்யாவில் அதானி குழுமங்களுடனான ஒப்பந்தங்கள் கைவிடப்பட்டுவிட்டன; ஆஸ்திரேலியாவில் நிறவெறி, இனவெறி குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருக்கிறது அதானி குழுமம்.. இஸ்ரேல் தொடங்கி வியட்நாம் வரையிலான அதானியின் சாம்ராஜ்யம் இப்போது பீதிக்குள்ளாக்கிக் கிடக்கிறது.
மத்திய அரசின் SECI ஒப்பந்தத்தைப் பெற்ற பின்னர் வாடிக்கையாளர்களாக மாநில அரசுகளை லஞ்சம் கொடுத்து உருவாக்கிய அதானி குழுமம். இதனை அடிப்படையாக வைத்து அமெரிக்காவில் ரூ20,000 கோடி முதலீடுகளையும் பெற்ரது அதானி குழுமம். இந்த விவகாரத்தில் அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது அமெரிக்கா நீதிமன்றம்.
அமெரிக்காவின் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட செய்திகள் வெளியான நிலையில் அதானி குழுமத்துடனான கென்யாவின் நைரோபி விமான நிலைய ஒப்பந்தம், எரிசக்தி துறை ஒப்பந்தம் அனைத்தையும் அந்நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ ரத்து செய்துவிட்டார். அதானி குழுமத்தின் இந்த ஒப்பந்தங்களை ஏற்கனவே கென்யா நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. மக்களின் எதிர்ப்புப் போராட்டங்களால் இந்த ஒப்பந்தங்கள் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது கைவிடப்பட்டுவிட்டன.
இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் அதானி குழுமம் பெற்றுள்ள ஒப்பந்தங்கள், திட்டங்கள் நிலை என்னவாகும் என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
இலங்கை: இலங்கையில் அதானி குழுமத்துக்கு மன்னார் காற்றாலைத் திட்டத்தை மத்திய அரசுதான் போராடிப் பெற்றுக் கொடுத்தது. இது தொடர்பாக ஜனாதிபதியாக இருந்த கோத்தபாய ராஜபக்சேவுக்கு நெருக்கடி தந்தார் பிரதமர் மோடி என இலங்கை நாடாளுமன்றத்தில் பகிரங்கமாகவே குற்றம்சாட்டப்பட்டது. இலங்கை ஜனாதிபதியான அனுர குமார திசநாயக்க, தமது தேர்தல் வாக்குறுதியாக அதானியை வீட்டுக்கு அனுப்புவோம்; மன்னார் திட்டத்தை ரத்து செய்வோம் என உறுதியளித்திருந்தார். இதனால் அதானியின் இலங்கை காற்றாலை திட்டத்தின் கதி என்னவாகும் என தெரியவில்லை.
வங்கதேசம்: வங்கதேசத்தில் மின்சாரம் தொடர்பான ஒப்பந்தங்களை இந்தியா சார்பு பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சிக்காலத்தில் எளிதாக பெற்றிருந்தது அதானி குழுமம். இப்போது இந்தியா எதிர்ப்பு-பாகிஸ்தான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கை ஓங்கி இருக்கிறது. வங்கதேசத்திலும் அதானி குழும ஒப்பந்தங்கள் குறித்து விசாரணை நடத்த குழு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கதேசத்திலும் அதானி பெற்ற திட்டங்கள் நிலைமை என்னவாகும் என தெரியவில்லை.
மியான்மர்: மியான்மர் நாட்டின் யங்கூனில் ராணுவ ஆட்சியாளர்களிடம் இருந்து கொள்கலன் முனைய திட்டத்தை அதானி குழுமம் பெற்றது. மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட ராணுவ ஆட்சியாளர்களுடன் அதானி குழுமம் கூட்டு சேருவதா? என ஏற்கனவே கொந்தளிப்பு நிலவுகிறது.
ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியா அரசும் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே அதானி குழுமத்துக்கு உலகின் மிகப் பெரிய கார்மைக்கேல் நிலக்கரி சுரங்கத் திட்டத்துக்கு அனுமதி கொடுத்தது. இதற்கு எதிராக அந்நாட்டு பூர்வகுடிமக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். தற்போது அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் மீண்டும் கலகக் குரல்கள் ஆஸ்திரேலியாவில் வெடித்திருக்கின்றன. மேலும் அதானி குழுமம் தற்போது இனவெறி, நிறவெறி குற்றச்சாட்டுகளை ஆஸ்திரேலியாவில் எதிர்கொண்டிருக்கிறது.
தான்சானியா: தான்சானியா நாட்டின் தலைநகர் Dares Salaam துறைமுகத்தை 30 ஆண்டுகள் குத்தகைக்கு அண்மையில்தான் அதானி குழுமம் பெற்றிருந்தது.
வியட்நாம்: வியட்நாம் நாட்டின் 2 விமான நிலையங்களில் முதலீடு செய்ய அதானி குழுமம் முடிவு செய்திருந்தது. துறைமுகம் மற்றும் மரபுசாரா எரிசக்தி துறையில் 3 பில்லியன் டாலரை அதானி குழுமம் முதலீடு செய்யும் எனவும் வியட்நாம் அரசு தெரிவித்திருந்தது.
நேபாளம், பூட்டான், பிலிப்பைன்ஸ்: இந்த நாடுகளில் பல்வேறு நீர்மின் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது அதானி குழுமம்.
இஸ்ரேல்: இஸ்ரேல் நாட்டின் ஹைஃபா துறைமுகம் அதானி குழுமத்தின் வசம் இருக்கிறது.
இப்படி உலகம் முழுவதும் அதானி குழுமத்தின் சாம்ராஜ்யம் விரிந்து பரந்து கிடக்கிறது. ஆனால் அமெரிக்காவின் ஒற்றை பிடிவாரண்ட் விவகாரம் ஒரே நாளில் ஒட்டுமொத்த அதானி சாம்ராஜ்யத்தின் ஆணிவேரையே அசைத்துப் பார்க்கிறது!