
பஹ்ரைன் அரசாங்கத்தின் சமூக நல மேம்பாட்டு அமைச்சகம் கீழ் இயங்கும் அங்கீகாரம் பெற்ற ஒரே அமைப்பான பாரதி தமிழ் சங்கம், ஸ்டார் விஷன் நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனத்துடன் இணைந்து, ஜனவரி 16 , 2026 அன்று இந்தியன் கிளப் வளாகத்தில் சீரும் சிறப்புமாக நடத்த வடிவமைத்துள்ளது.
இலாப நோக்கற்ற இவ்வமைப்பானது தமிழ்ச் சமூகத்தின் தேவைகளுக்கு சேவை செய்வதிலும், தமிழ்ப் பண்பாட்டு பாரம்பரியத்தை பேணிப் பாதுகாப்பதிலும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.
கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக பஹ்ரைன் இந்தியன் கிளப் வளாகத்தில் இது தொடர்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது .
“தமிழர் திருநாள்” என்றும் “உழவர் திருநாள்” என்றும் பெருமையுடன் அழைக்கப்படும் இந்த தைப்பொங்கல் திருவிழா உலகெங்கிலும் வாழும் தமிழ்ப் பெருமக்களால் மிகுந்த விமரிசையுடன் கொண்டாடப் படுகிறது .
விழா நிகழ்ச்சிகள் காலை 7.30 மணிக்கு தொடங்கும். கோலப் போட்டியுடன் இது ஆரம்பமாகும்.

ஆண், பெண், குழந்தைகள் அனைவருக்கும் ஏற்றவாறு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், வீரசாகச போட்டிகள் உடற்கல்வி அதிகாரிகள் கண்காணிப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,
கயிறு இழுத்தல், உறியடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு மற்றும் போட்டிகள் நடைபெறும். விழாவின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க நூற்றுக்கணக்கான பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
பங்கேற்பாளர்கள் பாரம்பரிய பொங்கல் சடங்குகளில் கலந்து கொண்டு, புதிய மண்பானைகளில் இனிப்பான பொங்கலை பொங்கி வரும் வரை சமைத்து, “பொங்கலோ பொங்கல்!” என குறவைகள் இசைத்து ஆனந்தமுடன் முழங்குவர்.
மாவிலைத் தோரணங்கள் , பூ அலங்காரம், கரும்பு, வாழை மரங்கள் முகப்புடன் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட வளாகம் தாயகத்தில் காணப்படும் தமிழ்ப் பாரம்பரிய சூழலை உருவாக்கும்.
வானொலி பண்பலை நேரலை விழாவினை மெருகூட்டும்.
முத்துத்தீவின் பல பாகங்களிருந்தும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் குறிப்பாக உழைப்பாளர் சகோதரர்கள் இந்த மாபெரும் திருவிழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.
மேலும் வழக்கம்போல் அண்டை வளைகுடா நாடுகளிலிருந்தும் எண்ணற்ற தமிழன்பர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விழா நிகழ்ச்சிகள் காலை மற்றும் மாலை என இரண்டு பகுதிகளாக நடைபெறும்.
காலை அமர்வில் போட்டிகள் மற்றும் விளையாட்டுகள் நடைபெறுவதுடன், அதன் பின்னர் பாரம்பரிய முறையில் தலைவாழை இலையுடன் அறுசுவை மதிய பொங்கல் விருந்து பரிமாறப்படும்.
முறையான பயிற்சி பெற்ற தன்னார்வத் தொண்டர்கள் விருந்தோம்பல் பொறுப்பை ஏற்க உள்ளனர்.
ஒயிலாட்டம், பறை ஆட்டம், காவடி ஆட்டம், கரகாட்டம், நாட்டுப்புற நடனங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான பாரம்பரிய நடனங்களும் அரங்கேறும். வண்ண வண்ண உடையுடன் சுமார் 62 நடனக் கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
மேலும், 60-க்கும் மேற்பட்ட பெண்கள் சீருடையுடம் கலந்து கொள்ளும் மாபெரும் கும்மி நடனம் நடைபெறும்.

அனைத்து நடனங்களும் பஹ்ரைன் நாட்டில் புகழ்பெற்ற நடனக் கலைஞரும் நடன ஆசானுமான நிர்த்ய கலாரத்னா திருமதி ஹன்சுல் கனி அவர்களின் நடனப் பயிற்சியில் வடிவமைக்கப் படுகிறது .
மாலை அமர்வு பொழுதுபோக்கு விருந்தாக அமையும். தமிழ் திரைப்படத் துறை பிரபலங்களுடன் , சின்னத்திரை கலைஞர்கள் இணைந்து புரியும் இசைக்குழுவினருடன் வழங்கும் இன்னிசைக் கச்சேரி நடைபெறும்.
மிமிக்ரி மற்றும் கலகலப்பான நிகழ்ச்சிகளுடன் பார்வையாளர்களை மகிழ்விக்கும் என்பது உத்தரவாதம்.
பஹ்ரைன் பிரபலம் DJ சதீஷின் பன்முகத்திறன் கைவண்ணம் ரசிகர்களை உற்சாகத்தில் மிதக்க வைக்கும் .

நமது பண்பாட்டு பாரம்பரியத்தை அன்னிய மண்ணில் தமிழ் மணம் பரப்ப, “தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்” , “தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்” என்பன போன்ற நம் தேசக்கவி, மீசைக்கவி பாரதி கண்ட கனவை நனவாக்க ஒன்று கூடுவோம்.
இவ்விழாவில் பஹ்ரைன் அரசாங்கப் பிரமுகர்களும் , பல்வேறு இந்திய சங்கங்களின் பிரதிநிதிகளும் , தொழில் முனைவர்களும் , உயரதிகாரிகளும், தமிழ்ச் சமூகத்து அனைத்து தரப்பினரும் பங்கேற்கின்றனர்.
முந்தி வருவோர்க்கு முன்னிருக்கை உத்திரவாதம்.
தமிழால் இணைவோம்
தமிழ்க்கலாச்சாரத்தை பேணுவோம்.
அனைவரும் வருக !
அனுமதி இலவசம் !!


