சென்னை: மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஆட்டோ ஓட்டுநருக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறை தண்டனையை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட பெண்ணின் வாதத்தை ஏற்று, பாலியல் வன்கொடுமை வழக்கில் போக்சோ நீதிமன்றம் விதித்த 20 ஆண்டுகள் சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
மைனர் சிறுமியை திருமணம் செய்து கொண்ட முத்துக்குமார் என்பவர் குழந்தை பிறந்த பிறகு மருத்துவமனைக்குச் செல்லும் போது, விசாரணையில் குழந்தையின் தாய் மைனர் என தெரிய வந்ததால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதனை அடுத்து முத்துக்குமார் மீது, மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஆட்டோ ஓட்டுநர் முத்துக்குமாருக்கு போக்சோ நீதிமன்றம் 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், தண்டனை விதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் முத்துக்குமார் உடன், தனக்கு திருமணம் நடந்து குழந்தை உள்ளது. அவருடனே வாழ விரும்புகிறேன் என அந்தப் பெண் நீதிமன்றத்தில் வாதம் செய்துள்ளார்.
இதையடுத்து, பாலியல் வன்கொடுமைக்கான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி தண்டனையை ரத்து செய்தார் நீதிபதி.