சென்னை: கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் புதிய பயனாளிகளுக்கு உரிமைத்தொகை 10 ஆம் தேதியான சனிக்கிழமை வழங்கப்படுகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின் உரிமைத் தொகை வழங்குகிறார்.
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக மகளிருக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. நிதி நிலையை காரணம் காட்டி அந்த திட்டம் நிறைவேற்றுவதில் தொடர்ந்து தாமதம் ஆனது. இதனால், மகளிர் உரிமைத்தொகை திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என இல்லத்தரசிகள் பெரிதும் எதிர்பார்த்தனர். இந்தநிலையில், கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், விடுபட்டவர்களும் மேல் முறையீடு செய்ய தமிழக அரசு அவகாசம் வழங்கியுள்ளது. இதன்படி தகுதி வாய்த மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பித்தனர். அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு மெசெஜ் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் புதிய பயனாளிகளுக்கு நாளை உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு றிவித்துள்ளது.