சென்னை: தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டின் வீரர்கள் பிற நாடுகளுக்குச் சென்று சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வெல்ல செய்வதோடு நிற்காமல், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கு பெறும் வகையில் சென்னையில் ஆசிய, சர்வதேச அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை தொடர்ந்து நடத்தி, சென்னையை இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாகவும், உலகின் முக்கிய நகரமாகவும் உருவாக்கி வருகிறது. அதன் அடிப்படையில் மாமல்லபுரத்தில் 186 நாடுகளைச் சார்ந்த சதுரங்க விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, உலகமே சென்னையின் அழகை கண்டுகளித்த சென்னை பார்முலா 4 இரவு நேர சாலை கார் பந்தையம், சென்னை ஓபன் (WTA) சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் 2022 போட்டி, ஸ்குவாஷ் உலகக் கோப்பை 2023 போட்டி, 7ஆவது “ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி (ஆடவர்) சென்னை – 2023” போட்டி, 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச அளவிலான உலக சர்பிங் லீக் போட்டி, HCL சைக்ளோத்தான் (CYCLOTHON) போட்டி, ஏடிபி சேலஞ்சர் 100 சர்வதேச ஆண்கள் டென்னிஸ் போட்டி, ”சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் 2025” என பல்வேறு சர்வதேச போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் சென்னை மற்றும் மதுரையில் ஹாக்கி ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை தமிழ்நாடு – 2025 போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளன.


