தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழர் நல பேரியக்கத்தின் தலைவருமான பழ.நெடுமாறன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் கை முறிந்ததால் சிகிச்சை பெற்று மதுரை பேங்க் காலனியிலுள்ள தனது இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். அவரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்து இருந்தனர்.
இந்த நிலையில் மதுரைக்கு இரண்டு நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்றார். முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாளை முன்னிட்டு கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர், அங்கிருந்து புறப்பட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் சென்று தேவர் நினைவிடத்தில் மரியாதை செய்தார்.
அங்கிருந்து புறப்பட்டு மதுரைக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், பழ.நெடுமாறன் உடல்நலன் பாதிக்கப்பட்டு ஓய்வில் இருப்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக பழ.நெடுமாறன் இல்லத்திற்குச் சென்ற முதலமைச்சர் அவரிடம் உடல்நலன் குறித்து கேட்டறிந்தார். அப்போது அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர். சுமார் 20 நிமிடங்கள் வரை சந்திப்பு நீடித்துள்ளது.
இதுபற்றி பழ.நெடுமாறன் கூறுகையில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் இருந்தாலும் கூட, உடல்நலமின்றி இருக்கும் என்னை வந்து சந்தித்தது மிகவும் நெகிழ்வுக்குரியது. 2002ஆம் ஆண்டு பொடா சட்டத்தில் கைதாகி நான் சிறையில் இருந்தபோது, வேறோரு போராட்டத்தில் கைதாகி அதே சிறைக்கு வந்தார் ஸ்டாலின். ஒரே ப்ளாக்கில் இருவரும் 15 நாட்கள் ஒன்றாகத் தங்கியுள்ளோம். அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் அவர் என் மீது அன்பும் மதிப்பும் காட்டி வந்துள்ளார். இந்த நிலையில் என்னை நேரில் சந்தித்தது மறக்க முடியாதது. அவருக்கும் அமைச்சர்களுக்கும் நன்றி” என்று தெரிவித்தார்.