ஒடிசாவின் முதலமைச்சராக மோகன் மாஜி பதவியேற்றுக்கொண்டார்.
ஒடிசா சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 147 இடங்களில் பாஜக 78 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இந்நிலையில் முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் புவனேஸ்வரில் நடைபெற்றது.
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், 4 முறை பாஜக எம்.எல்.ஏவான மோகன் மாஜி முதலமைச்சராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் ஒடிசா ஆளுநர் ரகுபர் தாசை சந்தித்து மோகன் சரண் மாஜி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இந்நிலையில், 24 ஆண்டுகளுக்கு பிறகு பழங்குடி இனத்தை சேர்ந்த மோகன் மாஜி ஒடிசாவின் முதலமைச்சராக பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து கனக் வர்தன் சிங் தியோ மற்றும் பிரபாதி பரிதா ஆகியோர் துணை முதலமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
இதேபோல் இதர அமைச்சர்களும் அடுத்தடுத்து பதவியேற்றுக்கொண்டனர். இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.